சென்னை, ஆக.- 31 - மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்கோரி ஜனாதிபதியை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் அதில் கூறியதாவது:
இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவுக்கூறு 72-ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்த பிரச்சனையில், தமிழக முதல்வர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் ஓர் அறிக்கையினை இந்த மாமன்றத்தில் நேற்று முன்தினம் நான் அளித்தேன். அந்த அறிக்கையில், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீதரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை முதல்வராகிய நானோ, தமிழ்நாடு அரசோ, மாநில ஆளுநரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாத என்பதை தெளிவுபடநான் கூறியிருந்தேன். மத்திய அரசு இந்திய அரசமைப்பு சட்ட பிரிவுக்கூறு 257(1)-ன்படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 72-ன்படி, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டபின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசணைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 161-ன்படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினேன்.
இந்த சூழ்நிலையில், மேற்படி மூவருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டுவிடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இதுகுறித்து கோரிக்கைகள் வந்துள்ளன.
எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஙீஜெயலலிதா அந்த தீர்மானத்தில் கூறியுள்ளார்

No comments:
Post a Comment