வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக, தமிழ் திரையுலகம் சார்பில் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்பட்டது. அண்ணா சாலையிலுள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில், காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற உண்ணாவிரதத்தில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
‘காமராஜ்’ படத்தில் காந்தி வேடத்தில் நடித்திருந்த கனகராஜ், காந்தி வேடம் அணிந்து உண்ணாவிரத பந்தலுக்கு வந்திருந்தார். இதனால், பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது நிருபர்களிடம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, ‘‘இந்தியா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் நம்நாடு தன்னிறைவு பெறவில்லை. குடிநீர், மின்சார வசதி சரிவர கிடைக்கவில்லை. விவசாயமும் செழிக்கவில்லை. இதற்கு காரணம், ஊழல்தான்.
இன்று நாம் ஊழலை நீக்கினால்தான், வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பும், நல்வாழ்க்கையும் கிடைக்கும். நாடு தழுவிய இந்த அறப்போராட்டம் வெற்றி பெற்றால், வருங்கால இந்தியா ஒளிமயமாக இருக்கும்’’ என்றார்.
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க துணை தலைவர் சேரன் கூறுகையில், ‘நாட்டிலுள்ள எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. இதை வேரோடு களைய வேண்டும். அதற்கான அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இங்கு கூடியிருக்கிறோம்’’ என்றார்.
உண்ணாவிரதத்தில் நடிகர்கள் சூர்யா, அர்ஜுன், பார்த்திபன், மன்சூர் அலிகான், ஒய்.ஜி.மகேந்திரன், மனோபாலா, தியாகு, நடிகைகள் ரோகிணி, சோனா, எமி, இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், சசி, ஷக்தி சிதம்பரம், டி.பி.கஜேந்திரன், தயாரிப்பாளர்கள் அன்பாலயா கே.பிரபாகரன், சத்யஜோதி தியாகராஜன், பி.எல்.தேனப்பன், சித்ரா லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை 5 மணியளவில் காந்தி வேடத்தில் இருந்த கனகராஜ், அனைவருக்கும் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். நிகழ்ச்சி நடந்த இடத்தைச் சுற்றி ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக, உண்ணாவிரத மேடையில் அமர்ந்திருந்த தயாரிப்பு நிர்வாகி ஜெயச்சந்திரன் என்பவர், திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர். மருத்துவமனையில் ஜெயச்சந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாற்றத்தை ஏற்படுத்தும் நடிகர் சூர்யா நம்பிக்கை
நடிகர் சூர்யா கூறுகையில், ‘நாட்டில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட, எல்லோரும் விரும்புகிறார்கள். இப்போதுதான் அதற்கான நேரம் வந்திருக்கிறது. அன்னா ஹசாரே என்ற தனி மனிதனின் அறப்போராட்டம், இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பெரிய வரவேற்பைப் பெற்று, புதியதொரு மாற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.
இதற்கு காரணம், இளைஞர்களிடையேயும், மக்களிடையேயும் ஏற்பட்டுள்ள மாபெரும் விழிப்புணர்வுதான். இந்த எழுச்சி, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்’ என்றார்.

No comments:
Post a Comment