கொச்சியில் விமான நிலைய ஓடுபாதைக்குள் நடந்து சென்ற 14 வயது சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் கொச்சி நெடும்பாசேரியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
இதை சுற்றி 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் துபாய் செல்வதற்கான பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அப்போது, விமானம் அருகே ஒரு சிறுவன் நடந்து செல்வதை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பார்த்தார். உடனே, அவனை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். சிறுவனின் பெயர் கிரண் (14). திருச்சூர் பெரிங்கோட்டுகரையை சேர்ந்தவன்.
விமானத்தை பார்க்கும் ஆசையில் கொச்சி விமான நிலையத்துக்கு வந்த அவன், ‘பாஸ்’ எடுத்து கேலரியில் நின்று விமானம் புறப்படுவதையும், இறங்குவதையும் ரசித்துள்ளான். பின்னர், விமானத்தை தொட்டு பார்க்கும் ஆசை ஏற்பட்டதால் அங்குள்ள இரும்பு தடுப்பை தாண்டி குதித்து 2 கிமீ தூரம் ஓடுபாதையில் நடந்து சென்று விமானம் அருகே சென்றுள்ளான்.
பலத்த பாதுகாப்பு வளையங்களை தாண்டி, விமானம் அருகே சிறுவன் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தும்படி கொச்சி விமான நிலைய இயக்குனர் ஏசிகே நாயர் உத்தரவிட்டு உள்ளார்.
3 மாதங்களுக்கு முன்பும் இதேபோல் கொல்கத்தாவை சேர்ந்த வாலிபர் ஒருவர், விமான ஓடுபாதைக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment