சிறிலங்காவில் மனிதஉரிமை
நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று ஜப்பானின் முன்னாள் சிறப்பு
சமாதான தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான ஐந்து நாள் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“போருக்குப்
பிந்திய சூழலில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் மனிதஉரிமை
நிலைமைகளில் முன்னேற்றத்தை எட்டுவதும் முக்கியமான விடயங்கள்.
சிறிலங்கா அதிபரிடம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுள்ளேன்.
சிறிலங்காவில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும்.
பொறுப்புக்கூறுதல், நல்லிணக்க முயற்சிகளில் ஒரு பகுதியாகும். இவை தனித்தனியாக கையாளப்பட வேண்டும்.
ஏனைய
நாடுகளிடம் இருந்து இதற்கான மாதிரிகளை கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் அனைத்துலக நிலைமைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டால் அவை உதவியாக
இருக்கலாம்.
தேசிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பொறுப்புக்கூறும்
பொறிமுறை அனைத்துலக தர நியமங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும். அத்துடன் இந்த
முயற்சிகள் முற்றிலும் நியாயபூர்வமானதாகவும் உண்மைத்தன்மை கொண்டதாகவும்
இருக்க வேண்டும்.
தேசிய ரீதியான உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றின்
கீழேயே பொறுப்புக்கூறும் விவகாரங்களுக்கு பதிலளிக்க முடியும். கம்போடியா,
தென்னாபிரிக்கா போன்று, தேவைப்பட்டால் அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்பை
நாடலாம்.
உண்மை ஆணைக்குழுவின் மூலம் தேசிய நல்லிணக்கத்துக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளார் நெல்சன் மண்டேலா.
கிழக்கு
திமோரில், மதஅமைப்புகளும், சட்ட நிபுணர்களும் பங்களித்த முறைமை
சிறிலங்காவுக்கு பயனுள்ளதாக இருக்கும்.“என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment