Sunday, December 11, 2011

ரஷ்யாவில் கலவரத்துக்கு அமெரிக்காதான் காரணம்!

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு அமெரிக்காவின் தூண்டுதலே காரணம் என ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

அத்துடன், எதிர்ப்பாளர்கள் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி வெற்றி பெற்றது. எனினும், கடந்த தேர்தலைவிட 13 சதவீதம் குறைவான ஓட்டு வாங்கியது.

இந்நிலையில், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதால் மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கு வலு சேர்க்கும் வகையில், தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன் கூறியுள்ளார். இதுகுறித்து புடின் நேற்று கூறியதாவது:

ரஷ்யாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன் பேசி உள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சிகளுக்கு கோடிக் கணக்கான டாலர்களையும் அமெரிக்கா வழங்கி வருகிறது.
அணுஆயுத பலத்தில் அமெரிக்காவுக்கு நிகராக விளங்கும் ரஷ்யாவை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்ற முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அதன் தூண்டுதலில் ரஷ்யாவில் போராட்டம் நடத்துபவர்கள் ஒடுக்கப்படுவார்கள். இவ்வாறு புடின் ஆவேசமாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

free counters