எதுவித பாரபட்சமும் இன்றி இலங்கையுடன் இணைந்து செயற்படுமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐநா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கை தொடர்பில் நியாயமற்ற, அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐநா நிபுணர் குழு தனது அறிக்கையை தயாரிக்க சான்றுகள் பெறப்பட்ட விதமானது இலங்கை மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
30 வருடகால யுத்தம் குறித்து இனந்தெரியாத குழு தகவல் வழங்குமாயின் அதனை வைத்துக் கொண்டு விசாரணை நடத்த முடியாது என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கதை ஒன்றை தயாரித்து பொய்யான குற்றச்சாட்டுக்களையே நிபுணர் குழு முன்வைத்துள்ளதென ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சுமார் 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக நிபுணர் குழு அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த நிலையில் 1952ம் ஆண்டு தொடக்கம் ஐநாவுடன் இணைந்திருக்கும் இலங்கை மீது பாராபட்சம் காட்டாமல் ஐநா செயற்பட வேண்டுமென ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்தில் இருந்து சுமத்தப்பட்டு வரும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் இலங்கை நிராகரித்துள்ள நிலையில், குற்றங்கள் எதுவும் இடம்பெற்றனவா என ஆராய நியமிக்கப்பட்டுள்ள உள்நாட்டுக் குழுவின் அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படலாம் என குறிப்பிடப்படுகிறது.

No comments:
Post a Comment