Friday, November 18, 2011

பொன்சேகாவுக்கு 3 வருட சிறைத்தண்டனை..!

வெள்ளைக் கொடி விவகார வழக்கின் குற்றவாளியாக இனம்காணப்பட்ட முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகாவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதித்து இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், சரத் பொன்சேகாவுக்கு 5000 ரூபா அபராதமும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

அபராத தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை சுட்டுக் கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் உத்தரவிட்டார் என சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இதன் பின்னணியில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வெள்ளைக் கொடி விவகார வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

சண்டே லீடர் பத்திரிகைக்கு சரத் பொன்சேகா வழங்கிய போட்டி தொடர்பாகவே சரத் பொன்சேகாவிற்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர மற்றும் சுல்விகார் ரசீம் ஆகியோர் சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளதுடன், சரத் பொன்சேகா மீதான மூன்று குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றமவர் என நீதிபதி வராவெவ தீர்ப்பளித்துள்ளார்.

நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ.எம். பி. பீ வராவெவ, சுல்விகார் ரசீம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ், பிரெட்ரிகா ஜேன்ஸ், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட பலர் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

free counters