Sunday, November 27, 2011
இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை திறந்து வைப்பு.
இலங்கையின் முதலாவது நெடுஞ்சாலையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் விஷேடமாக ஜப்பானிய சமாதானத் தூதுவர் யசூசி அகாசி கலந்துகொண்டார்.
அத்துடன் வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட அதிக எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை இந்த வீதியூடான பொது பஸ் போக்குவரத்தும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெற்கு அதிவேக வீதியானது கொழும்பு கொட்டாவையிலிருந்து காலி பின்னதுவ வரை 152 கிலோமீற்றர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியில் கட்டணம் செலுத்தியே பயணிக்க முடியும். இதேவேளை இந்த வீதியூடாக பயணிப்பதற்கு முச்சக்கர வண்டி-மோட்டார் சைக்கிள்- உழவு இயந்திரம்- சைக்கிள்கள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதசாரிகளும் இந்த வீதியூடாக செல்ல முடியாது.
நாட்டில் முதற் தடவையாகவே இவ்வாறான அதிவேக வீதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மணித்தியாலத்திற்கு 120 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பயணிக்க முடியும்.
அத்தோடு இந்த வீதியில் பயணிப்பதற்காக 8 இடங்களில் மாத்திரமே நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களிலிருந்து பயணிக்கும் தூரங்களுக்கான கட்டணங்கள் நான்கு வகையாக அறவிடப்படவுள்ளது.
இதேவேளை இந்த வீதிகளில் பொது மக்கள் நுழையாத வகையில் வீதியில் இரண்டு பக்கமும் வேலிகள் போடப்பட்டுள்ளதுடன் வீதி தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்த வீதியானது போக்குவரத்துக்காக இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு முன்னர் கடந்த 20 ஆம் திகதி பொது மக்கள் மற்றும் பாதசாரிகள் பார்வைக்காக திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment