Thursday, November 17, 2011

அவுஸ்திரேலியாவுடனான தொடர்புகளை வலுப்படுத்தும் அமெரிக்கா.


அமெரிக்கா அவுஸ்திரேலியாவுடனான இராணுவத் தொடர்புகளை வலுப்படுத்தவிருக்கின்றது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் அவுஸ்திரேலிய தலைமை அமைச்சர் ஜூலியா ஜில்லார்ட்டும் தெரிவித்துள்ளனர். அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள பராக் ஒபாமாவும், ஜூலியா கில்லார்ட்டும் நடத்திய கூட்டு செய்தியாளர் மகாநாட்டில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
முதல் தொகுதியான 250 அமெரிக்க கடற்படையினர் அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படுவர் என ஒபாமா தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை ஒஸ்திரேலியா பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும்போது இரு நாடுகளின் பாதகாப்புக் கூட்டணியின் ஆழமான விவரங்களை வெளியிடவிருப்பதாகவும் பராக் ஒபாமா தெரிவித்தார். முழு ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் தனது உறுதியான நிலைப்பாட்டை அமெரிக்கா முன்னெடுத்து வருவதாக ஒபாமா தெரிவித்தார்.
சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்குக்கு மாற்றாக அவுஸ்திரேலியாவை அமெரிக்கா பார்க்கின்றது என்றும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஒபாமா தெரிவித்தார். ‘ அமைதியான சீனா எழுச்சி பெற்று வருவதை நாம் வரவேற்கின்றோம்’ என்று ஒபாமா தெரிவித்தார்.
‘எனது செய்தி பகிரங்கமாக மாத்திரம் அல்ல, தனிப்பட்ட முறையிலும் சீனாவிற்கு நாம் சொல்லியுள்ளோம். சீனாவின் எழுச்சி பொறுப்பு வாய்ந்தாகவும் அமையவேண்டும் என்றும்; சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளோம்’ என்றும் ஒபாமா தெரிவித்தார்.
ஹொனொலுலவில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஓத்துழைப்பு மன்றக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு ஒபாமா அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்தார். இரு நாடுகளும் தங்களின் கூட்டுப்பாதுகாப்பு உடன்படிக்கையை செய்த 60 ஆவது ஆண்டு நிறைவாக இவ்விஜயம் அமைந்துள்ளது.
அடுத்த வருடம் தொடக்கம் 250 அமெரிக்க கடற்படையினர் வடக்கு அவுஸ்திரேலியாவில் சுழற்சி முறையில் நிறுத்தப்படுவர் என்று அவுஸ்திரேலிய தலைமை அமைச்சர் ஜூலியா ஜில்லார்ட் தெரிவித்தார்.
இரண்டாம் உலக யுத்தத்தில் உயிரிழந்த அமெரிக்காவினதும் அவுஸ்திரேலியாவினதும் படையினரின் நினைவுச்சின்னத்திற்கு அஞ்சலி செய்ய ஒபாமா டார்வின் நகருக்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.
அவுஸ்திரேலிய விஜயத்தை முடித்துக்கொண்டு ஒபாமா ஆசிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேஷியாவிற்கு டார்வினிலிருந்து செல்லவிருக்கின்றார்.

No comments:

Post a Comment

free counters