Sunday, January 29, 2012

8 வயது சிறுமி திடீர் மரணம்

மஸ்கெலியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியொருவர் இன்று காலை (29.01.2012) திடீர் மரணமடைந்த​தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இவ்விடயம் குறித்து தெரியவருவதாவது, 



நேற்று சனிக்கிழமை இரவு (28.01.2012) வாந்தி, வயிற்றோட்டம் என சுகயீனமுற்ற நிலையில் மஸ்கெலியாவில் உள்ள மறை பிரதேச தோட்டத்தினைச் சேர்ந்த 8 வயது சிறுமியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அனுமதிக்கப்பட்ட சிறுமி மறுநாள் அதாவது இன்று (29) காலை திடீனெ உயிரிழந்துள்ளார். 

நோயாளி உரிய வகையில் கவனிப்பின்றியே மரணமடைந்ததாக சிறுமியின் பெற்றோர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனினும் குறித்த சிறுமியினது தாயின் அவசர செயற்பாடு காரணமாக இந்த மரணம் சம்பவித்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக அவர் மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரியுடன் தொடர்பு கொண்டு குடும்பத்தினர் முறைப்பாட்டைச் செய்ய ஏற்பாடு செய்ததுடன், மத்திய மாகாண சுகாதார அமைச்சர் எஸ்.கே.அமரதுங்கவின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார். 

மேலும் மஸ்கெலியா உள்ளிட்ட மலையக வைத்தியசாலைகளின் அசமந்த போக்கு தொடர்பில் மத்திய மாகாண சபையின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக முரளி ரகுநாதன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

free counters