Monday, March 19, 2012
களத்தில் குதித்தார் ஹிலாரி!
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரவளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சூழலில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இவ் விவகாரத்தை நேரடியாகக் கையாள்வதற்காக தற்போது களத்தில் குதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற மொத்தம் 47 நாடுகளில் லிபியாவுக்கான வாக்களிக்கும் தகமை தற்காலியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் 46 நாடுகளே வாக்களிக்கும் தகமையைப் பெற்றுள்ளன.
குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு சினத்தை ஏற்படுத்தியிருந்ததோடு அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்களுக்கு முஸ்லிம் மக்களை இலங்கை பாவித்தமை அமெரிக்காவுக்கு கோபத்தை அதிகரித்ததாக அறியமுடிகின்றது.
இந்நிலையிலேயே அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் கீழ் நிலை இராஜாங்க மட்டத்தில் இருந்த இலங்கை தொடர்பிலான பிரேரணை விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.
அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக இலங்கை மேற்கொண்ட சகல விடயங்களை உன்னிப்பாக கவனித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கைக்கு இவ்விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைச் சபையில் கடுமை அதிர்ச்சியைக் கொடுப்பதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய சூழிலிலேயே இலங்கையினுடைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைச் சபைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே வாஷிங்டன் வருமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு ஹிலாரி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இருப்பினும் குறித்த இந்தக் கடிதத்துக்கு ஜீ.எல்.பீரிஸ் பதிலளிக்காத நிலையில் தற்போது இலங்கை அரச தரப்பால் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் கைகூடுவதற்குரிய வாய்ப்புக்கள் குறைவென்றே தெரியவருகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment