Sunday, October 9, 2011

தமிழக மீனவர்கள் கச்சதீவில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் - முதல்வர் வலியுறுத்தல்

“தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி, துன்புறுத்தி வருகிறது. இதை இலங்கை அரசிடம் தெரிவிப்பதுடன், பாரம்பரிய உரிமைப்படி கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்” என்று முதல்வர் ஜெயலலிதா, மத்திய வெளியுறவுத் துறை செயலரிடம் வலியுறுத்தினார்.
மத்திய வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மத்தாய், மூன்று நாள் பயணமாக இலங்கை செல்கிறார். தமிழக மீனவர்கள் பிரச்னை மற்றும் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக, இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தச் செல்லும் அவர், அதற்கு முன்னதாக நேற்று மாலை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்.
அப்போது, தமிழக மீனவர்கள் படும் துயரம் பற்றி, வெளியுறவுத் துறை செயலரிடம் முதல்வர் கூறியதாவது:தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி, துன்புறுத்தி வருகிறது.
இந்த அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த ஐந்து மாதங்களாக, தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் என, பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதல்களை, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாக பார்க்கக் கூடாது; இந்திய குடிமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகத் தான் பார்க்க வேண்டும்.
இந்தப் பிரச்னையை, தேசிய பிரச்னையாக பார்க்க வேண்டும். இந்த பிரச்னையை, இலங்கை அரசிடம் விரிவாக நீங்கள் (மத்தாய்) எடுத்துக் கூற வேண்டும்.
மேலும், இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைப்படி, கச்சத்தீவு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் அனைவரும், அவரவர் பூர்வீக இடங்களில் குடியேறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இலங்கை அதிபர் மற்றும் இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.முதல்வர் தெரிவித்த கருத்தை, இலங்கை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக, ரஞ்சன் மத்தாய் உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment

free counters