Tuesday, November 22, 2011

மியான்மர் இடைத்தேர்தலில் போட்டியிட சூச்சி முடிவு.

மியான்மர் நாட்டில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட ஜனநாயக கட்சி தலைவர் அவுங் சான் சூச்சி திட்டமிட்டுள்ளார்.
மியான்மர் நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடந்தது. கடந்த 1990ம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் அவுங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது.
ஆனால் சூச்சியை ஆட்சியில் அமரவிடாமல் அவரை வீட்டு சிறையில் அடைத்தது ராணுவ அரசு. கடந்த 22 ஆண்டுகளில் சூச்சி 15 ஆண்டுகள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் சூச்சி அரசியலில் ஈடுபட முடியாத அளவுக்கு விதிமுறைகளை அமல்படுத்தியது ராணுவ அரசு. இதனால் தேசிய லீக் கட்சி அந்த தேர்தலை புறக்கணித்தது. இதையடுத்து ராணுவம் ஆதிக்கம் பெற்ற அரசு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
தேர்தல் முடிந்த பின் சூச்சி வீட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அடுத்த மாதம் மியான்மர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மியான்மரில் ஜனநாயக நடைமுறைகள் தலைகாட்டுவதால் இடைத்தேர்தலில் போட்டியிட சூச்சி விருப்பம் தெரிவித்துள்ளார்.
மியான்மர் பாராளுமன்றத்தில் தற்போது 48 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் நடைபெற்றால் அதில் போட்டியிட தேசிய லீக் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சூச்சி கடந்த வாரம் வெளியிட்டுள்ளார்.
இந்த தேர்தலில் போட்டியிட்டால் அவுங் சான் சூச்சியின் கவுரவம் பாதிக்கப்படும் என தேசிய லீக் கட்சி தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். இதற்கு சூச்சி பதிலளிக்கையில், அரசியல் நடத்த வேண்டுமென்றால் கவுரவத்தையெல்லாம் பார்க்கக் கூடாது என்றார்.
இடைத்தேர்தல் எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை. இந்த தேர்தலில் போட்டியிட தேசிய லீக் கட்சி மீண்டும் அரசியல் கட்சியாக பதிவு செய்து கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

free counters