Tuesday, November 22, 2011

வன்னிக்கு இலவச மின்சாரம்..

வன்னிப் பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கான மின்விநியோகம் ஓராண்டுக்கு அறிவிக்கப்பட்டபடி இலவசமாக வழங்கப்படுமென மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உறுதியளித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிபுணத்துவ ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் வன்னிப்பகுதி மின் விநியோகத்தில் ஏற்பட்டுவரும் காலதாமதம் குறித்து பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான மு. சந்திரகுமார் சுட்டிக்காட்டிய போதே அமைச்சர் குறித்த விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

இதன் போது, வன்னிப்பகுதியில் மீள்குடியேறிய மக்கள் மீண்டும் தம்மை மீளக்கட்டியொழுப்ப மின்சாரம் மிக அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் குறிப்பிட்டார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்விநியோக திட்டத்தின் மூலம் வன்னியில் பல பகுதிகளுக்கு மின்விநியோகம் நடைபெற்று வரும் போதும் இன்னமும் பல பகுதிகளுக்கு மின்விநியோகம் முற்றாக வழங்கப்படவில்லை எனவும் மின் கம்பங்கள் பொருத்தப்பட்ட பகுதிகளுக்கு இணைப்புக்களை வழங்கவும் இணைப்புக்கள் வழங்கப்பட்ட பகுதிகளுக்கு பாவனை இணைப்புக்களை வழங்கவும் முடியாத நிலையில் உபகரணங்களின் பற்றாக்குறை நிலவுவதையும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு வன்னியில் 3500 குடும்பங்களுக்கு உடனடியாக இணைப்புக்களை வழங்க வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இலவச மின்விநியோகம் இடைநிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளித்த மின்சக்தி அமைச்சர் சம்பிக்கரணவக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி மீள்குடியேறிய மக்களுக்கு ஓராண்டுக்கான இலவச மின்விநியோகம் நடைபெறும் எனவும் இவ் ஆண்டின் முடிவுக்குள் சாத்தியபாடான பகுதிகளுக்கு மின்விநியோகத்தை விரைவுபடுத்த முடியும் எனவும் ஏனைய பகுதிகளுக்கும் செயற்பாட்டை விரைவுபடுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment

free counters