Monday, January 16, 2012
களை கட்டியது ஜல்லிக்கட்டு ! 64 வீரர்கள் படுகாயம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு களை கட்டியது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். காளைகளின் ஆவேச தாக்குதலில் 64-க்கும் அதிகமான வீரர்கள் படுகாயம் அடைந்தனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். பொங்கல் பண்டிகையின் முத்தாய்ப்பாக நடக்கும் இந்த ஜல்லிக்கட்டில் மதுரை மாவட்டம் முதன்மையாக திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றவை.
கடந்த சில ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டு நடத்த விலங்குகள் நலவாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும் ஏராளமான விதிகளை வகுத்து அதன்படி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. கோர்ட் நிபந்தனைகளின்படி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அவனியாபுரத்தில் நேற்று முதலாவதாக ஜல்லிக்கட்டு நடந்தது. 240 காளைகள் போட்டிக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. கால்நடை டாக்டர்கள் பரிசோதனைக்கு பிறகு 23 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். சீறிப் பாய்ந்த காளைகள், வீரர்களை முட்டி துவம்சம் செய்தன. காளைகள் முட்டியதில் 21 வீரர்கள் உள்பட 42 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், பாலமேட்டில் இன்று காலை ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பங்கேற்க மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 367 காளைகள் விலங்குகள் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஆண்டு பதிவு பெற்றிருந்த 286 காளைகளும் இதில் அடங்கும். மாடுபிடி வீரர்கள் 530 பேர் பதிவு செய்திருந்தனர். சவுக்கு மரங்களாலான இரண்டு அடுக்கு வேலி அமைக்கப்பட்டு, சுற்றிலும் கம்பி வலைகள் கொண்டு மூடப்பட்டு இருந்தன. மாடுபிடி வீரர்களுக்கோ, காளைகளுக்கோ காயம் ஏற்படாத வகையில் மஞ்சமலை ஆற்றுத் திடலில் உள்ள வாடிவாசல் பகுதியில் இருந்து காளைகள் வெளியேறி வரும் பகுதியில் 250 மீட்டர் தூரத்துக்கு தென்னை நார் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன.
இன்று காலை 6 மணியில் இருந்தே காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மதுரை மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் ராமகிருஷ்ணன் தலைமையில் உதவி இயக்குனர் கோபிநாத், பாலமேடு கால்நடை மருத்துவர் ஜோசப், அலங்காநல்லூர் கால்நடைத்துறை மருத்துவர் மெரில்ராஜ் உள்பட 60-க்கும் அதிகமான மருத்துவ குழுவினர் மாடுகளை பரிசோதனை செய்தனர். கொம்புகளின் கூர்மை, அளவு போன்றவை குறித்து ஆராயப்பட்டது. காளைகளுக்கு மது மற்றும் போதை பொருட்கள் கொடுக்கப்பட்டதா, அவைகளுக்கு கோபம் ஏற்றும் அளவுக்கு கண்களில் மிளகாய் பொடி தூவப்பட்டு உள்ளதா, மாடுகளின் திமில்களில் எண்ணெய் மற்றும் பீங்கான் துகள்கள் தூவப்பட்டுள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. பாலமேடு ஆரம்ப சுகாதார மருத்துவர் வளர்மதி தலைமையில் 120-க்கும் அதிகமான மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி மற்றும் வயது குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது.
காலை 10.05 மணியளவில் ஜல்லிக்கட்டு துவங்கியது. கலெக்டர் சகாயம் கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக மஞ்சமலை சுவாமி கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை வீரர்கள் யாரும் அடக்க முயற்சி செய்யவில்லை. இதையடுத்து ஊர் மரியாதைக்காரர்களின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்தக் காளைகளையும் வீரர்கள் அடக்கவில்லை. தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து அடக்கினர். பல காளைகள் பிடிபட்டன. சில காளைகள் யாருக்கும் பிடி கொடுக்காமல் நாலுகால் பாய்ச்சலில் ஓடி விட்டன. காளைகள் முட்டி துவம்சம் செய்ததில் 64-க்கும் அதிகமான மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் விதிகளின்படி எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு ஜல்லிக்கட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. எஸ்பி அஸ்ரா கார்க் தலைமையில் ஏடிஎஸ்பி மயில்வாகனன், டிஎஸ்பி குமார் உள்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மக்களுக்கு குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
அலங்காநல்லூரில் நாளை அமர்க்களம்
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடக்கிறது. பாலமேட்டில் பங்கேற்கும் அதே காளைகள் அலங்காநல்லூரிலும் கலந்து கொள்கின்றன. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் ஆயிரத்து 500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழாவை காண வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் அலங்காநல்லூரில் குவியத் தொடங்கி உள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அலங்காநல்லூரில் குவிந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment